இரண்டு வாரங்கள் முன்பு பிரதமர் மோடி சொன்னார் "இந்நாட்டில் பக்கோடா விற்பவர்கள் தன்னம்பிக்கையுடனும் தன்மானத்தோடும் வாழ்கிறார்கள், நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறார்கள்" என்று. உடனே காங் கட்சியை சார்ந்த முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், "பக்கோடா விற்பது ஒரு தொழில் என்றால் பிச்சை எடுப்பதும் ஒரு தொழில் தான்" என்று நடைபாதை வியாபாரிகள் உட்பட சிறு வியாபாரிகள் அனைவரையுமே இழிவுப்படுத்தினார். பிறந்த சிதம்பரத்திற்கு அடித்தட்டு மக்களை பற்றி என்ன தெரியும்?
இதற்கு கண்டனம் எழுந்தவுடன் "நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, இப்படிதான் சொன்னேன்" என்று சப்பைக்கட்டு சொன்னார்.
"கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்" என்று ஒரு தொழிலை கற்றுக்கொண்டு அதன் மூலம் வாழ்க்கையில் சிறப்பாக முன்னேறுபவர்கள் ஏராளம். சிறு வியாபாரிகள் மற்றும் சுயதொழில் முனைவோரால் நாட்டில் வளர்ச்சியும் ஏற்படுகிறது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இதுவே நிலை.
ஆனந்த விகடன் நிறுவனர் வாசன் அவர்களின் தாய் சிறிய இட்லி கடை வைத்து அதன் மூலமே மகனை முன்னேற்றினார், வசந்த் & கோ, VGP நிறுவனங்கள் இன்று எவ்வளவு பெரிய நிறுவனங்கள், அவை எவ்வாறு தொடங்கியது. KFC ஒரு பக்கோடா கடை மாதிரியே துவங்கியது. பிரதமர் சொன்னது "தன்னம்பிக்கையுடன் உழைத்தால் நீ சாதிக்கலாம் என்பதை மட்டுமே".
ஆனால் இங்குள்ள சிலர் "பக்கோடா விற்பதை பிச்சையெடுப்பதற்கு சமம் " என்று சிதம்பரம் சொன்னதை வசதியாக மறந்து விட்டார்கள். மோடி சொன்னதை விமர்சிப்பவர்கள் ஒன்று விவரம் புரிந்துகொள்ளாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது வக்கிரப்புத்தி கொண்டவராக இருக்க வேண்டும்.
இங்கு பதிவு போடுபவர்கள் பலர் "ஹிந்தி கற்றால் பெரிய ஆளாகலாம் என்றால் ஏன் ஹிந்திக்காரன் பானிபூரி விற்கிறான்" என்று இளக்காரமாக கேட்டவர்களே. அவர்களை பொறுத்தவரையில் இவைகள் சிறுமை வேலைகள். இங்குள்ள முகநூல் போராளிகள் ஒரு குடிசை படத்தை போட்டுவிட்டு 'இதுதான் எனது வீடு என்றால் என்னை நண்பனாக ஏற்பீர்களா" என கேட்பது, லைக் போடுவது எல்லாம் செய்வார்கள். ஆனால் நிஜத்தில் பலர் அப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகவே மாட்டார்கள்.
சரி இவ்வளவு பேசறியே "நீ பக்கோடா கடை வைப்பியா" என்று என்னை பார்த்துக்கேட்க வேண்டாம். எனக்கு சமையல் தெரியாது, அதனால் பக்கோடா கடை வைக்க மாட்டேன். நான் பள்ளிப்படிக்கும் காலங்களில் எனது பெற்றோர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபொழுதும், வருமானம் போதாமல் சாக்லேட், கூல்ட்ரிங்க்ஸ் விற்றுள்ளார்கள், சிறிய உணவகம்க்கூட நடத்தியுள்ளார்கள்.
எங்கள் பகுதியில் காலை வேளைகளில் பேப்பர் போடும் வேலையில் இருந்தான் ஒரு சிறுவன். அவனது உழைப்பை பார்த்து, ஒரு வீட்டுக்காரர் தான் வேலைப்பார்க்கும் நிறுவனத்தில் சிறிய வேலைக்கு சிபாரிசு செய்தார். அவனும் சேர்ந்து, தனது உழைப்பினால் முன்னேறி 10 வருடத்தில் இன்று நல்ல நிலையில் இருக்கிறான், படிச்சது +2 ஆனால் இன்று சுமார் 25000 சம்பாதிக்கிறான்.
இது போல ஏராளாமான உதாரணங்கள் உண்டு. தமிழ்நாட்டில் மட்டும்தான் யாரை எப்படி கிண்டலடிக்கலாம், மீம்ஸ் போடலாம் என்று யோசித்து நேரத்தை வீணடிக்கிறோம்.
நான் இங்குள்ளோரை எல்லாம் "பக்கோடா விற்க போங்க" என்று சொல்லவில்லை, அது பக்கோடாவோ, பானிபூரியோ, அல்லது எந்த ஒரு சிறு தொழிலும் செய்பவர்களை ஏளனமாக பார்க்காதீர்கள் என்று தான் சொல்கிறேன், ஏனென்றால் மீம்ஸ் போடுவதை விட பக்கோடா போடுவது நல்லது