Thursday, August 9, 2018

தியாகிகள் பெயரில் ஒரு காடு

பகத் சிங்,நேதாஜி, காந்திஜி, வ.உ.சி, பாரதியார், திலகர், மங்கள் பாண்டே, சந்தரசேகர் ஆசாத் என திரும்பிய திசையெங்கும் சுதந்திர போராட்ட தலைவர்கள். 


இது அருங்காட்சியகத்திலோ, மாறுவேட போட்டியிலோ இல்லை.  'க்ராந்தி வனம்' என பெயரிடப்பட்டுள்ள 4 ஏக்கர் இடத்தின் பெயர் தான் இது. இங்கு சுமார் 700 மரங்கள் உள்ளன, ஒவ்வொன்றிற்கும் ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சொந்தக்காரர் மஹாராஷ்டிராவில் வசித்து வரும் 77 வயதாகும் சம்பத்ராவ் பவார்.  

1992ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 50வது ஆண்டு கொண்டாடத்தின்  பொழுது, சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற நோக்கில்தியாகிகளின் பெயரில் மரம் வளர்க்க திட்டமிட்டார் இவர்.  ஒரு பொட்டல் காட்டை தேர்ந்தெடுத்து, சொந்த செலவில் அதை சீராக்கி மரக்கன்றுகள் நட்டார், சில கல்லூரி மாணவர்களும் இவருக்கு உதவினர். 1998ல் 1500 மரங்களுடன் இந்த இடம் பூத்து குலுங்கிக்கொண்டிருக்கையில், அந்த இடம் வனத்துறைக்கு சொந்தம் எனக்கூறி அரசு எடுத்துக்கொண்டது. அதுமட்டுமில்லாமல் அத்துடன் ஒரே ஆண்டில் அநேக மரங்களை வெட்டி தள்ளியது.

தளராத சம்பத்ராவ், அவருக்கு சொந்தமான 4 ஏக்கர் கரும்பு தோட்டத்தில், புதிதாக மரக்கன்றுகள் நட ஆரம்பித்தார். வருமானம் கொழிக்கும் நிலத்தை இவ்வாறு பயன்படுத்த குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  வேறு இடத்தில் சொந்தமாக இருக்கும் வயலில், கரும்பு பயிரிட்டு கொள்ளலாம் என்று கூறி குடும்பத்தினரை சமாதானம் செய்தார் சம்பத்ராவ். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வீணடிக்கிறார் என்று  ஊர் மக்கள் அவரை ஏளனம் செய்தனர், ஆனால் அவற்றையெல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு தனது பணியில் கவனம் செலுத்தினார். 

இவருக்கு ஆதரவாகவும் இந்த செயலுக்கு ஊக்கமும் அளித்த அவரது 21 வயது மகன், பாறை சரிந்து இறந்து போனபின்பும், தனது பணியை விடாமல் செய்து வருகிறார்.  இவரது க்ராந்தி வனத்தில் தற்பொழுது 700 தியாகிகள் உள்ளனர். (இவர் மரம் என்று அழைப்பதில்லை, தியாகிகள் என்றே அழைக்கிறார்).

மாணவர்கள் 1 நாள் வந்து தங்கி, நமது சுதந்திர போராட்ட வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில்,  இந்த நிலத்தின் ஒரு ஓரத்தில் மாணவர்களின் வசதிக்காக ஹாஸ்டல் மற்றும் ஆடிட்டோரியம் கட்டியுள்ளார்.  அரசிடமிருந்து தனக்கு எவ்வித பொருளுதவியும் வேண்டாமென கூறும் இவர், மக்கள் இங்கு தொடர்ந்து வந்து ஊக்கமளித்து, தனது மரணத்திற்கு பிறகும் இந்த பணியை தொடர்ந்தாலே போதும் என்கிறார் இந்த லட்சிய புருஷர்.

பல விருதுகளை வென்றுள்ள இவர், மக்கள் ஒத்துழைப்புடன், பலிராஜா அணை உட்பட நீர்நிலைகளையும் ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.