
இன்றைய வழக்கு ரபேல் தொடர்பானது தான், ஆனால் அதன் ஊழல் குறித்தது அல்ல. சற்று விளக்கமாக பார்ப்போம்.
ரபேல் வழக்கில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன, எனவே இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று என்று பிரஷாந்த் பூஷன் மற்றும் அருண் ஷோரி உச்ச நீதிமன்றத்தில் சென்ற ஆண்டு மனு தாக்கல் செய்தனர். டிசம்பர் 2018ல் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் இருப்பதாக கருதவில்லை என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பிரஷாந்த் பூஷன், அருண் ஷோரி உள்ளிட்டோர் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
இதற்கிடையில் ஹிந்து நாளேடு சில ஆவணங்களை வெளியிட்டது. யாரோ ஒரு அதிகாரி (ஒப்பந்தத்திற்கு) தொடர்பு இல்லாதவர் கேள்வி கேட்டார் என்று, ஒரு பக்கத்தின் முதல் பாதியை மட்டும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த கேள்விக்கு கீழேயே அன்றைய பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்த பதில் திட்டமிட்டு மறைக்கப்பட்டது. அதே நாள், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் முழு பதிலையும் வெளியிட்டு தெளிவு படுத்தியது.
மேலும் சில ஆவணங்களை வெளியிட்டது ஹிந்து நாளேடு. இதை புதிய ஆதாரங்களாக கருதி சீராய்வு மனுக்களை ஏற்க வேண்டும் என்று பூஷன் மற்றும் அருண் ஷோரி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். "இவை திருடப்பட்ட ஆவணங்கள். எனவே ஏற்க கூடாது என்று அரசு தெரிவித்தது".
அரசின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் "இந்த
ஆவணங்களை வைத்து சீராய்வு மனுவை விசாரிக்கிறோம்" என்று கூறியுள்ளது. அவ்வளவு தான். இது எல்லா வழக்குகளிலும் நடைமுறையில் உள்ள ஒன்று தான். இதை தாண்டி யோசிக்க ஒன்றுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால், ஊழல் நடந்துள்ளதா இல்லையா என்பது கூட வழக்கு அல்ல, இந்த ஊழல் குறித்து புலனாய்வு வேண்டுமா வேண்டாமா என்பது தான் வழக்கு.
இதை வைத்து காங்கிரஸ் 'மோடி குற்றவாளி' என்று புலம்புவது அபத்ததம். இந்த சீராய்வு மனுவை நீதிமன்றம் விசாரித்து, ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருதினால், முழு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடும். அப்போதும் கூட மத்திய அரசு ஊழல் செய்தது என்று கூற முடியாது. அந்த புலனாய்வு விசாரணையில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே, மோடி அரசு ஊழல் செய்தது என்று கூற முடியும்.
காங்கிரசின் வாதத்தின் படி பார்த்தால், 2G வழக்கில் கனிமொழி, ராசா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக CBI செய்துள்ள மேல் முறையீடு ஏற்கப்பட்டு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்படியானால் அவர்கள் குற்றவாளிகள் என்று காங்கிரஸ் ஒப்புக்கொள்கிறதா? இத்தனைக்கும் இதில் முறைகேடுகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்து பல நிறுவனங்களின் உரிமம் கூட ரத்து செய்யப்பட்டது.
அதே போல ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், சோனியா, ராகுல், ராபர்ட் வாத்ரா உள்ளிட்டோர் மீது பல வழக்குகளில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இவர்கள் அனைவரும் ஜாமீனில் தான் உள்ளார்கள். மாறன் மீது பல ஊழல் வழக்குகளில் இதே நிலை தான். இவற்றில் குற்றம் நடந்திருக்க முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றங்கள் கூறியுள்ளன. அப்படியானால் திமுக, காங்கிரஸ் மொத்த குடும்பமும் குற்றவாளிகள் தானே?
ரபேல் விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக உச்சநீதிமன்றம் ஒரு இடத்தில கூட தெரிவிக்கவில்லை. முறைகேடு நடந்துள்ளதா என்பதை அறிய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடலாமா வேண்டாமா என்பது குறித்து விசாரிக்கிறோம் என்று மட்டுமே கூறியுள்ளது.
சில முட்டாள்களுக்கு புரியும்படி கூற வேண்டுமானால், வரன் பார்த்துவிட்டு சம்மதம் தெரிவிக்கும் முன்னரே, பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிப்பது, எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் இன்று காங்கிரஸ் இன்றைய தீர்ப்பை கொண்டாடுவது.