அத்திவரதரை தரிசிக்க வரும் கூட்டம் எதிர்பார்ப்பை விட அதிகம் உள்ளது. 48 நாட்கள் முடிவில் சுமார் 60 லட்சம் பேர் அத்திவரதர் தரிசனம் பெற்றிருப்பார்கள். இதை எண்ணிக்கையை வைத்து இது பெரியார் மண் இல்லை, ஆன்மீக பூமி என்று பரவலாக கூறுகிறார்கள்., இன்னும் சிலரோ, இந்த பக்தர்கள் ஏப்ரல் 18 எங்கே சென்றார்கள்? என கேட்கிறார்கள். அலுப்புடன் இக்கேள்வி எழுப்புபவர்கள் பாஜக ஆதரவாளர்கள் தான்.
அத்திவரதர் மட்டுமல்ல, தாமிரபரணி புஷ்கரம் , காவேரி புஷ்கரம் என்று அனைத்திற்கும் பிரம்மாண்ட கூட்டம் கூடியது. சபரிமலை, திருப்பதிக்கு இங்கிருந்து செல்வோர் பல லட்சம். எல்லா கோவில்களிலும் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் திரள்கிறார்கள். இருப்பினும் இங்கு ஏன் ஹிந்துத்வம் எழ முடியவில்லை என்று பாஜகவினர் அங்கலாய்க்கிறார்கள். மறுபுறம் தேர்தல் தோல்வியை வைத்து 'தமிழ்நாட்டில் ஹிந்துத்வம் நுழைய முடியாது" என்று பிற கட்சியினர் பேசி வருகிறார்கள்.
எது சரி என கேட்டால், நான் அடித்து சொல்வேன் - இது ஒரு ஆன்மீக பூமி, இங்கு ஹிந்துத்வம் வேரூன்றி பல ஆயிரம் வருடங்களாகிறது. ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள் தோன்றிய பூமி. எத்தனை எத்தனை கோவில்கள், எத்தனை எத்தனை தெய்வங்கள், இவைகளே இதற்கு சாட்சி.
ஹிந்துத்வத்தை பாஜகவின் தேர்தல் வெற்றியாக பார்த்தால் குழப்பம் வரத்தான் செய்யும். ஹிந்துத்வம் என்பது பாஜகவின் சொத்து அல்ல. அது எந்த தனி மனிதருக்கும் தனிப்பட்ட உடமை அல்ல. ஹிந்துத்வம் இந்நாட்டின் ஆன்மா.
- அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது ஹிந்துத்வம்
- ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஹிந்துத்வம்
- செய்யும் தொழிலே தெய்வம் என்பது ஹிந்துத்வம்
- நாடு அதை நாடு என்பது ஹிந்துத்வம்
- தேசமே தெய்வம் என்பது ஹிந்துத்வம்
- அறத்தின் வழியில் நில் என்பது ஹிந்துத்வம்
- மக்கள் சேவையே, மகேசன் சேவை என்பது ஹிந்துத்வம்
- பிறர் பொருளுக்கு ஆசைபடாதே என்பது ஹிந்துத்வம்
- அனைவரும் சரிசமானம் எனது ஹிந்துத்வம்
- ஆன்மீக வழியில் நடப்பது ஹிந்துத்வம்
இன்னும் இது போல ஆயிரம் சொல்லலாம். 85% ஹிந்துக்கள் வாழும் தமிழ்நாட்டில், சாதாரண மக்கள் மேலே குறிப்பிட்ட அனைத்தையுமே கடைபிடித்து வருகிறார்கள். திராவிடத்தின் பிடியில் சிக்கி ஒரு 5% வேறு மாதிரி இருக்கலாம். திராவிடம் என்று கதறுபவர்களிடம், திராவிடம் என்றால் என்ன? என்று கேட்டால் ஏதேதோ பிதற்றுவார்களே தவிர, பதிலே வராது.
தமிழ்நாடு முன்னேறியதன் காரணமே பெரியார் என்பார்கள், இல்லாவிட்டால் எல்லோரும் மரம் ஏறிக்கொண்டிருப்பார்கள் என்பர் இந்து திராவிட அடிப்பொடிகள். ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா ஈ.வெ.ரா போனதே இல்லை, அங்கென்ன எல்லோரும் மரம் ஏறிக்கொண்டா இருக்கிறார்கள்?
குழந்தை வளரும்போது அதன் எல்லா அங்கங்களும் தானே வளரும். நாட்டின் வளர்ச்சியின் அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியும் பின்னிப்பிணைந்தது. இதற்கு ராமசாமியோ, அண்ணாதுரையோ, மட்டும் காரணமில்லை. ஈ.வெ.ரா வை கடுமையாக விமர்சனம் செய்ததே அண்ணாதுரையும், கருணாநிதியும் தான். ஈ.வெ.ரா பற்றி புட்டு புட்டு வைக்க எங்களுக்கு குறிப்பு எடுத்துக்கொடுத்ததே இவர்கள் தான். பெரியாரின் மறுபக்கம் பற்றிய காப்புரிமை அண்ணாதுரை மற்றும் கருணாநிதியிடம் தான் உள்ளது. நாங்கள் அதிலிருந்து xerox எடுத்து கொடுக்கிறோம், அவ்வளவு தான்.
பல கிராமங்களில் எல்லைச்சாமி, கருப்பசாமி வழிபாடுகள் பல ஆண்டுகளாக உள்ளன. இவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஒட்டு போடுவார்கள், ஆனால் தங்கள் மதத்தையும், நம்பிக்கையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
தீ மிதிப்பது காட்டுமிராண்டித்தனம் என்று கருணாநிதி சொன்னபோது, பொதுமக்கள் தாமாகவே இறங்கி கண்டனம் தெரிவித்தார்கள். இதை விட பல மடங்கு தாக்குதல்களை, கொடுமைகளை ஹிந்துக்கள் எதிர்க்கொண்டு முறியடித்த காரணத்தால், 'சீ, சீ, போ, போ' என்று விட்டு விட்டார்கள்.
ஹிந்துத்வத்தின் குணமே, மன்னிப்பது தான். சூரியனும், மழையும் யார் சபித்தாலும் தனது கடமையை செய்துக்கொண்டுதான் இருக்கும். அது போலவே ஹிந்துக்கள். இதுவும் ஹிந்துத்வம்
பரிட்சைக்கோ, நேர்முக தேர்வுக்கோ அல்லது வேறு நல்ல காரியத்திற்கு செல்லும்போது, வீட்டில் உள்ள பெரியவர்கள், சாமி படம், ஆன்மீகவாதிகள் படம் (சங்கரர், ராமானுஜர், அரவிந்தர், பாண்டிச்சேரி அன்னை, ராகவேந்திரர், சாய் பாபா, ரமணர்,இன்னும் எத்தனையோ பேர் ) படங்களுக்கு முன்பு வணங்கி விட்டு தான் செல்கிறார்கள். திமுக தொண்டர்களின் பிள்ளைகள் கூட பெரியார் படத்தை வணங்குவதில்லை, ஏறெடுத்தும் கூட பார்ப்பதில்லை.
பெரியார் படம் சும்மா ஒரு வெட்டி பந்தாக்காக வீட்டில் மாட்டியுள்ளோர் தான் ஏராளம். ராசாத்தி அம்மாள் கூட கனிமொழி வெற்றி பெற, திருச்செந்தூர் கோவில் தான் சென்றார், ஈ.வெ.ரா. சமாதிக்கு போகவில்லை. இன்னும் சொல்ல போனால் அவரது புகைப்படத்தையே தனது முகநூலில் இருந்து கனிமொழி அகற்றிவிட்டார்.
பலரும் கேட்பது போல எதற்கெடுத்தாலும் பெரியார், அண்ணாதுரை என்று கூறும் திமுகவினர், ஏன் தங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது வியாபார நிறுவனத்துக்கோ அப்பெயர் வைக்கவில்லை?
உங்கள் முன்
- இரண்டு ஓட்டல்கள், லக்ஷ்மி விலாஸ் , பெரியார் உணவகம்-
- இரண்டு நகைக்கடைகள் - பாலாஜி jewelers, பெரியார் நகைக்கடை
- முருகன் ஸ்டோர்ஸ், அண்ணாதுரை ஸ்டோர்ஸ்
- கணேஷ் பாத்திரக்கடை, கருணாநிதி பாத்திரக்கடை
இரண்டாவது கடை விலை கம்மியாக இருந்தாலுமே இயல்பாக எங்கு செல்வீர்கள்?
பெரியார் படம் வந்தது, current bill கட்டும் அளவுக்கு கூட டிக்கட் விற்பனையாகவில்லை. ஏதோ திமுக ஆட்சியில் இருந்ததால், தியேட்டர்களை மிரட்டி ஒப்புக்கு ஓட்டினார்கள். ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றினார்கள்.
குழந்தைகளுக்கு ராமாயணம், மஹாபாரதம், பாகவதம், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பக்தி மற்றும் ஆன்மீக கதைகளை பெற்றோர் சொல்லி தருகிறார்கள். ஆனால் பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி வாழ்க்கை வரலாற்றை கட்சிக்கார்களே தம் பிள்ளைகளுக்கு சொல்ல மாட்டார்கள், அவர்களுக்கே தெரியும், இந்த தலைவர்களின் பவுசு.
பழக்கதோஷத்தில் திமுகவிற்கு ஒட்டு போடுகிறார்களே தவிர்த்து, "திராவிடத்தின் மீது பற்று, அதனால் போடுகிறேன்" என்று கூறுபவர்கள் ரொம்ப ரொம்ப குறைவு.
இங்கு சில பிரிவினை சக்திகள் மற்றும் urban naxal கூட்டம் இருக்கின்றன, மக்களை குழப்பி, அவர்களை தூண்டி விட்டு வேடிக்க பார்க்க. அந்த எண்ணிக்கை சில ஆயிரம் மட்டுமே. 1000 பேர் இருக்கும் தெருவில் 5 பொறுக்கிகள் இருக்கத்தான் செய்வார்கள், அதற்காக அந்த பகுதியே ரவுடி area என சொல்ல முடியுமா? அது போல தான். இங்கு பல கோடி நல்லவர்கள் உள்ளனர், கூடவே பூமிக்கு பாரமாக சில ஆயிரம் விஷமிகள் உள்ளனர். அவ்வளவு தான்.
மற்றப்படி பார்த்தால், தமிழ்நாட்டை போன்ற ஆன்மீக பூமி இந்தியாவில் எங்குமே இல்லை.
இப்போது சொல்லுங்கள், தமிழ்நாட்டில் ஹிந்துத்வம் உள்ளதா, இல்லையா என்று.