Friday, May 24, 2024
வைகாசி அனுஷம் வள்ளுவர் ஜென்ம நக்ஷத்திரம்
1971ம் ஆண்டு வரை வைகாசி அனுஷம் அன்றே திருவள்ளுவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வந்தது. எவ்வித காரணமுமின்றி தை 1 தான் வள்ளுவர் பிறந்த நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் தை 1 இல்லை தை 2 வள்ளுவர் பிறந்தநாள் என்றும் மாற்றப்பட்டது.
இன்றைக்கும் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில், சென்னைத் திருவள்ளுவர் மன்றம், தேவகோட்டை திருவள்ளுவர் சங்கம், மதுரை திருவள்ளுவர் கழகம்உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைகாசி அனுஷம் அன்றே, வள்ளுவரின் பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது.
வள்ளுவரின் பிறந்தநாள் தை 2 என்று வாதிடுபவர்கள் மிகவும் பின்னோக்கி எல்லாம் செல்ல வேண்டாம், ஒரு 80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை தெரிந்துக்கொண்டாலே போதும்.
1935 மே மாதம்18 ஆம் நாள், அனுஷநட்சத்திர நாள். அன்றைய தினம்
திருவள்ளுவர் திருநாட்கழகத்தினர் வள்ளுவர் உருவப்படத்துடனும், திருக்குறள் சுவடியுடனும் ஊர்வலமாகச் சென்று மயிலைத் திருவள்ளுவர் கோயிலை அடைந்துதிருவள்ளுவர் திருமேனிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர்.அன்றைய தினம் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற வள்ளுவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இப்போதும் வைகாசி அனுஷம் அன்று தான் கோவிலில் வள்ளுவருக்கு விழா எடுக்கப்படுகிறது.
மறைமலை அடிகள், கா. நமச்சிவாய முதலியார், பா.கண்ணப்ப முதலியார், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், T.செங்கல்வராயன் உள்ளிட்ட பல அறிஞர்கள் இதில் பங்கேற்றனர்.
அடுத்த ஆண்டு வைகாசி அனுஷம் அன்று நடைபெற்ற வள்ளுவர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு தலைமயேற்றவர் தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர். சுவாமி சித்பவானந்தா,கி.வா. ஜகந்நாதன், அமரர் கல்கி உள்ளிட்ட எண்ணற்ற தமிழ் அறிஞர்களும் வள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இன்னும் சொல்லப்போனால் முன்னாள் முதல்வர் அண்ணா, பெரியார் ஆகியோரும் கூட வைகாசி அனுஷம் வள்ளுவர் பிறந்த தினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கூட 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
Tuesday, February 13, 2024
வசந்த பஞ்சமி கொண்டாடுவது ஏன்
இன்று (14.02.2024) வசந்த பஞ்சமி. தமிழகத்தில் சரஸ்வதி பூஜையானது நவராத்திரியுடன் கொண்டாடப்படுகிறது. பாரதத்தின் பல மாநிலங்களில் வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி தேவி படத்தின் முன்பு புத்தகங்களை வைத்து, மலரால் பூஜித்து வழிபடுகிறார்கள். காளிதாசர் முன் சரஸ்வதி தேவி தோன்றி அவருக்கு ஞானம் வழங்கிய நாள் என்பதால் இந்த தினம் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
காளிதாசர் கொண்டாடப்பட வேண்டியவர், பிற்காலத்தில் சில அறிவீலிகள் தோன்றக்கூடும் என்று எப்போதோ தனது காவியங்கள் மூலம் வாயை அடைத்து விட்டார். அது பற்றி, கட்டுரையின் கடைசியில் உள்ளது.
வசந்த பஞ்சமி என்பது காதலர் தினமாக கூட மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. காதலர்களுக்கு என்று ஒரு தினமா ? இந்த மேற்கத்திய கலாச்சாரம் எதற்கு இங்கு என்று சிலருக்கு ஐயம் எழலாம். நமது கொண்டாட்டங்களும், மேற்கத்திய கொண்டாட்டங்களுக்கு வித்தியாசம் உண்டு. அவர்களுக்கும் புத்தாண்டு உண்டு, நமக்கும் புத்தாண்டு உண்டு, அந்த கொண்டாட்டம் எப்படியுள்ளது, நமது கொண்டாட்டங்கள் எப்படியுள்ளது. அதுதான் வித்தியாசம்.
வசந்த பஞ்சமி அன்று காதலர்கள் என்ன செய்வார்கள்? ஆங்காங்கே பந்தல்கள் அமைக்கப்பட்டிருக்கும். அதாவது தற்காலிகமாக ஏற்படுத்தப்படும் வழிபாடு தலங்கள். தற்காலிகம் என்பதால் மேலே ஓடு கூட இருக்காது, ஷாமியானா மட்டுமே இருக்கும், அதனால் பந்தல் என்று அழைக்கிறார்கள். இந்த இடங்களுக்கு சென்று வழிபடுவார்கள், திருமணம் கைகூட பிரார்த்தனை செய்வார்கள், அவ்வளவு தான்.
இந்த ஆண்டு மட்டும் பிப்ரவரி 14 அன்று வருகிறது. மற்ற ஆண்டுகளில் வெவ்வேறு தேதிகளில் இது வரும்.
இந்த வசந்த பஞ்சமி காதலர் தினமாக ஏன் அழைக்கப்படுகிறது?சூரபத்மன், தாரகாசுரனின் அட்டகாசங்கள் அதிகரித்து வந்தன, அவனை சிவனின் மகன் மட்டுமே அழிக்க முடியும். ஆனால் சிவனோ ஆழந்த தவத்தில் இருந்தார். எனவே தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, மன்மதன் தனது அம்புகளை ஏவி அவரது தவத்தை கலைத்தான். நெற்றிக் கண்ணை திறந்த ஈசன் மன்மதனை சாம்பலாக்கினார். சிவபெருமான் உள்ளே இருந்த அந்த ஆற்றல், அங்கே கிடத்தப்பட்டது, மிகவும் வெப்பமாக இருந்த அந்த ஆற்றலை சரவண பொய்கையில் தேவர்கள் சேர்க்க, சில நாட்களுக்கு பிறகு ஆறுமுகப் பெருமான் அவதாரம் நிகழ்ந்தது.
மன்மதன் சாம்பலானாவுடன் அவனது மனைவி ரதிதேவி சிவபெருமானிடம், தனது கணவன் இவ்வாறு செய்ய காரணம் என்னவென்று விளக்கினாள். உடனே சிவபெருமான், நீ 40 நாட்கள் தவம் இருந்தால், உன் கணவனை மீட்கிறேன் என்று வாக்களித்தார். அதன்படி 40 நாட்கள் கடும் தவம் மேற்கொண்ட ரதி, தனது தவத்தை பூர்த்தி செய்த நாள் இந்த வசந்த பஞ்சமி.
காளிதாசர் ஏன் போற்றப்பட வேண்டியவர்?
காளிதாசர் எழுதிய மகா காவியங்கள் ரகுவம்சம், குமார சம்பவம், அபிஞான சாகுந்தலம், மேகதூதம், விக்ரமோத்சவம். ரகுவம்சத்தில் ராமனின் மூதாதையர் துவங்கி ராமர் மற்றும் அவர் சந்ததிகளையும், குமார சம்பவத்தில் முருகப்பெருமானையும், அபிஞான சாகுந்தலத்தில் பரத சக்கரவர்த்தியை பற்றியும் அல்லவா பாடிவிட்டு சென்றுள்ளான். பரதனில் இருந்து தானே மஹாபாரதம் ! இப்படி மாபெரும் காப்பியங்களை ஒருவரே படைத்துள்ளார் என்றால், ராமனும் சரி, முருகனும் சரி பாரத தேசம் முழுவதற்கும் உரியவர்கள் என்பதால் தானே. இங்குள்ள சிலர் ராமர் வடநாடு, முருகன் தமிழ்நாடு என்றெல்லாம் கூறுவது பிதற்றல் தானே ?
நிறைவாக, தமிழர்களுக்கு முருகர் மட்டுமே கடவுள் என்று குதர்க்கத்துடன் வாதிடுபவர்களுக்கு
கச்சியப்ப சிவாச்சாரியார் 12ம் நூற்றாண்டு வாக்கில் தமிழில் கந்த புராணம் எழுதினார். அதற்கு சில நூற்றாண்டுகள் முன்பு காளிதாசர் மேலே சொன்ன குமாரசம்பவத்தை சம்ஸ்க்ருதத்தில் எழுதினார்.இது இரண்டுமே கலியுகத்தில். துவாபர யுகத்தில் வாழ்ந்த வேத வியாசர் ஸ்கந்த புராணம் எழுதினார், அதுவும் முருகன் குறித்து தான். இன்னும் நிறைவாக, வால்மீகி ராமாயணத்தில், விஸ்வாமித்ரர் ராம - லக்ஷ்மணர்களை தன்னுடன் காட்டிற்கு அழைத்து செல்கிறார், இருவரும் பாலகர்கள், அப்போது முனிவர் அவர்களுக்கு பல கதைகள் சொல்கிறார், அவற்றில் முக்கியமானது முருகப்பெருமானின் அவதார சரித்திரம். புரியும்படி சொல்ல வேண்டுமானால், முருகனின் அவதாரம் குறித்து ராமாயணத்திலேயே பாடல்கள் உள்ளன.
எனவே ராமன், கிருஷ்ணர், முருகன், விநாயகர், ஐயனார், அம்பிகை எல்லோருமே ஹிந்துக்கள் அனைவருக்கும் உரியவர்கள் தான்.
Subscribe to:
Posts (Atom)