Sunday, March 11, 2018

கர்நாடக மாநில தனிக்கொடி - அபத்தமா, ஆபத்தா?

கர்நாடக மாநிலத்திற்கென்று அதிகாரப்பூர்வ கொடி வேண்டும் என்று அங்குள்ள சில அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மாநிலத்தை ஆளும் காங் அரசும் அதற்கு செவி சாய்த்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.  இந்த கோரிக்கைகள் புதியதல்ல, தமிழ்நாட்டில் திடீர் போராளீகள் அவ்வப்பொழுது முளைப்பது போல, கர்நாடகாவிலும் அவ்வப்பொழுது கிளம்புவதுண்டு. இது வரை ஆட்சி செய்த அரசுகள், இந்த கோரிக்கைகளை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிட்டன.

பஞ்சாப் தவிர்த்து பெரிய மாநிலங்கள் எல்லாவற்றிலும் காணாமல் போய்விட்ட காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்க என்ன செய்வது என்று முழி பிதுங்கியுள்ள நிலையில், மாநிலத்திற்கு தனிக்கொடி என்கிற கருத்தை ஆதரித்துள்ளது. இதற்காக ஒரு தனி கமிட்டி அமைத்து, அந்த கமிட்டி மஞ்சள், வெள்ளை, சிவப்பு மூவர்ணக்கொடியை பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக அரசின் இம்முடிவிற்கு தேசியவாதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  தேசிய ஒருமைப்பாட்டிற்கு இது குந்தகம் விளைவிக்கும் என்பது பெரும்பாலோனோர் கருத்து. மக்களின் மொழியுணர்வை தூண்டி விட்டு ஓட்டு அறுவடை செய்ய முடிவெடுத்துவிட்டது காங்கிரஸ். 

"மாநிலத்திற்கென்று தனிக்கொடி வைத்துக்கொள்ளக்கூடாது என்று சட்டம் இல்லை" என்று வாதிடுகிறார்கள், என்ன ஒரு பித்துக்குளித்தனம்.  இப்படி ஒரு பிற்போக்கான எண்ணத்துடன் நாளைய அரசியல்வாதிகள் இருப்பார்கள் என்று நமது அரசியல் சாசனத்தை எழுதியவர்கள் கற்பனைக்கூட செய்திருக்க மாட்டார்கள், எனவே அது பற்றி சட்டக்குறிப்பு இல்லை.

இதை பின்பற்றி ஒவ்வொரு மாநிலமும் தனிக்கொடி கோரிக்கை வைத்தால் என்ன ஆகும்? 

தமிழ்நாட்டில் தற்பொழுது பெரும்பாண்மை உள்ளது அதிமுக. கருப்பு வெள்ளை சிவப்பு கொண்ட கொடியே மாநிலத்தின் கொடி என்று முடிவெடுத்தால் என்ன ஆகும்?  ஆட்சி மாறி திமுக வந்து அவர்கள்,  "தனிக்கொடி வைத்துக்கொள்ளக்கூடாது என்று சட்டத்தில் இல்லாதது போல, கொடியின் நிறத்தை மாற்றக்கூடாது என்று சட்டம் இல்லையே" என்று சொல்லி கொடியின் நிறம் கருப்பு சிவப்பு என்று மாற்றினால் என்ன நடக்கும்?  தமிழ் புத்தாண்டு, தலைமை செயலகம், மாநிலக்கொடி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். (எல்லா திட்டங்களுக்கும் அம்மா, கலைஞர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர்கள் இவர்கள், எனவே இவர்கள் இப்படி செய்யமாட்டார்கள் என்று சொல்ல முடியாது)

மஹாராஷ்டிராவில் பெரும்பாலான வீடுகளில்  காவிக்கொடி  பறக்கிறது. நாளையே மஹாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் காவிக்கொடியே அவரவர் மாநிலத்தின் கொடி என்று முடிவெடுத்தால் இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? 

இமயம் முதல் குமரி வரை ஒரே தேசம். பல்வேறு காரணிகளால் வேறுபட்டு இருந்தாலும் நாம் அனைவரும் பாரத மாதாவின் பிள்ளைகள் என்கிற எண்ணத்துடனேயே பெரும்பாலான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். 70 ஆண்டுகளுக்கு முன்பு, அம்பேத்கர், படேல் ஆகியோரின் கடும் எதிர்ப்பையும் மீறி, நேரு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனிக்கொடி வைத்துக்கொள்ள அனுமதியளித்தார். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று பின்னர் தெரிந்தது.   காஷ்மீருக்கு உள்ள தனிக்கொடியே வேண்டாம் என்கிற எண்ணம் வலுத்துவருகிற நிலையில், கர்நாடக மாநிலத்திற்கு தனிக்கொடி என்பது பெரும் ஆபத்தில் போய் முடியும்.  மற்ற மாநிலங்களுக்கும் இந்த வியாதி பரவினால், தேசம் பலவீனம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments:

Post a Comment