விவசாயிகள் முன்னேற்றம், சமுதாய நல்லிணக்கம், பசுபாதுகாப்பு, அரசின் நலத்திட்டங்கள், நீர் மேலாண்மை, தேச பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் திரு மோஹன் ஜி பாகவத் தனது விஜயதசமி உரையில் குறிப்பிட்டார்.
அதன் சாராம்சம் இதோ (என்னால் இயன்றளவிற்கு தமிழில் தந்துள்ளேன், ஏதேனும் குறைகள் இருப்பின், மன்னிக்கவும்)
தேசிய கண்ணோட்டமே நமது பாரம்பரியம். நமது சமுதாயம் தேசிய சிந்தனைக்கொண்டதாக இருக்கவேண்டுமென்றால், நமது சிந்தனையாளர்களும், அறிஞர்களும் காலனிய மனோபாவத்தை விட்டொழிக்கவேண்டும்.
ஐரோப்பாவில் பிறந்து, அதன் கலாச்சாரத்தில் வளர்ந்தபொழுதும் , பாரத நாட்டு மக்களின் மனம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியற்றுடன் ஒன்றிணைந்து, தனது சேவை பணிகளை இங்கே வெற்றிகரமாக செய்த சகோதரி நிவேதிதை, நமது பாரம்பரியங்கள் மற்றும் தேசிய சிந்தனைகளுடன் நாமும் ஒன்றி இருக்கவேண்டியதற்கு உத்வேகியாக இருக்கிறார்.
ஒரு தேசம் என்பது செயற்கையாக உருவாவதில்லை. மற்ற நாடுகளை போல இல்லாமல், நமது மக்கள் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் பாரதம் அமைந்துள்ளது. பல்வேறு பிராந்தியங்கள், இனம், மொழி, மதம், ஜாதி, பாரம்பரியங்கள் என்று இருந்தாலும் நமது கலாச்சாரம் நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
நமது முயற்சியால் யோகக்கலையை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது, சுற்றுசூழல் குறித்த நமது அணுகுமுறைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது, நமது பாரம்பரியங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவருவதை பார்க்கையில் நமக்கு பெருமிதம் ஏற்படுகிறது.
எல்லையில் தீவிரவாத ஊடுருவல்களை முறியடித்தது மற்றும் எல்லைக்கு அப்பாலிருந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி தருவது போன்ற விஷயங்களை மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். அனைத்து பாதுகாப்பு படைகளுக்கும், அவர்களது கடமைகளை செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானும், சீனாவும் செய்த அத்துமீறல்களை, நாம் உறுதியாக எதிர்கொண்டுள்ளோம். டோக்லாம் விவகாரம் மற்றும் சர்வதேச அளவிலான ராஜதந்திர நடவடிக்கைகளை நாம் சிறப்பாக கையாண்டுள்ளோம்.
காஷ்மீரில் ஹிந்துக்கள் பல ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக அகதிகள் போல வாழுகின்றனர். அவர்கள் சந்தோஷமான, கண்ணியமான, பாதுகாப்பான வாழ்க்கை வாழ நாம் வழி வகை செய்யவேண்டும். ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் வளர்ச்ப்பணிகளை எடுத்து செல்ல வேண்டும்
ரோஹிங்கியாக்கள் வன்முறையாளர்கள், குற்றப்பின்னணி கொண்டவர்கள், பிரிவினைவாதிகள், பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடையவர்கள். இதனால்தான் மியான்மரிலிருந்து ரோஹிங்கியாக்கள் துரத்தியடிக்கப்பட்டார்கள். இவ்விவகாரத்தில் தேசத்தின் பாதுகாப்பை மனதில் வைத்து முடிவெடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு போன்ற மகத்தான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மண் பரிசோதனை, வேளாண் பொருட்களுக்கான இணைய வழி சந்தை, போன்றவை சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள கச்சிதமான நடவடிக்கைகள். எனினும் இந்த திட்டங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடைகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.
சிறியதும், பெரியதுமாக பல துறைகளில், சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ள அதே வேளையில், அவர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. விண்வெளி துறை, உள்நாட்டு பாதுகாப்பு, கட்டமைப்பு துறை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவை சிறப்பாக செயல்படுகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம், குடிமக்கள் மத்தியில் கடமையுணர்வு ஏற்பட்டுள்ளது
விவசாயிகள் தங்கள் குடும்பத்தை வளமாக நடத்தும் அளவிற்கும், அடுத்த ஆண்டு பயிர் செய்ய முதலீடு இருக்கும் வகையிலும் வருமானம் கிடைக்கப்பெறவேண்டும். விவசா யத்தில் புதிய தொழில்நுட்பத்தையை பயன்படுத்தும் அதே வேளையில், மாசில்லாத பாரம்பரிய முறைகளையும் பயன்படுத்த வேண்டும். மாடுகளை வைத்து விவசாயம் மேற்கொள்வதால் குறைந்த முதலீட்டில் அதிக மகசூல் ஈட்ட முடியும்
பசு பாதுகாப்பு நமது அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. பசு பாதுகாப்பு தொடர்பாக பல மாநிலங்களில் ஆட்சியிலிருந்த வெவ்வேறு கட்சிகள் சட்டம் இயற்றியிருக்கின்ற்ன. பசுபாதுகா ப்பு தொடர்பான வேலைகள் சட்ட வரம்பிற்கு உட்பட்டும், அரசியலமைப்பிற்கு உட்பட்டும் நடக்க வேண்டும்.
பசுபாதுகாப்பு தொடர்பாக நடந்த வன்முறை சம்பவங்களுக்கும், பசுபாதுகாப்பு தொண்டர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. பசுபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பலர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பசுபாதுகாப்பு பணியில் இஸ்லாமியர்களும் ஈடுபட்டுள்ளனர். இவ்விஷயத்தில் பொய் பிரச்சாரம் செய்து ஹிந்து - முஸ்லீம் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாக இஸ்லாமியர்கள் என்னிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜன்தன் திட்டம், முத்ரா திட்டம், எரிவாயு மானியம், விவசாய காப்பீடு திட்டங்கள் பொதுமக்களுக்கு மிக்க பயனுடையவையாக உள்ளது. இத்துடன் தொழில்துறை, விவசாயம், சமூக சூழல் என அனைத்திற்குமேற்ற கொள்கைகளை வகுப்பது அவசியம். சிறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், சிறு மற்றும் குறுந்தொழில்கள், சிறு மற்றும் பெரு வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் இக்கொள்கைகள் இருக்க வேண்டும்.
சுதேசி பொருட்களை மட்டுமே வாங்கவேண்டும் என்கிற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட வேண்டும்.
சிறு, குறுந்தொழில்கள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகள், சில்லறை வர்த்தகம், கைவினை துறை, கூட்டுறவுத்துறை ஆகியவற்றின் மூலம் கோடிக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்துறைகளை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும்.
பட்டியிலனத்தவர்கள், பழங்குடியின மக்கள் ஆகியோருக்காக மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் பல உள்ளன. இவைகள் அவர்களை உரிய முறையில் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்.
பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நீர் மேலாண்மை மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு தொடர்பாக மகத்தான பணிகள் செய்து வருகிறார்கள். 'நதிகளுக்காக இணைவோம்' போன்ற திட்டங்கள் சிறப்பானவை.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நமது கல்விமுறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. நமது மக்கள் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை அது ஏற்படுத்திவிட்டது. நமது கல்விமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு அறிவாற்றலையும், தன்னம்பிக்கையும், தேசிய சிந்தனையையும் அளிக்க வேண்டும். கிராமங்கள், மலைப்பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கும் இத்தகைய தரமான கல்வி குறைந்த கட்டணத்தில் சென்றடைய வேண்டும்.
குடும்பங்களில் அமைதியும் ஒற்றுமையும் நிலவ வேண்டும். பெரியவர்கள் சிறியவர்களுக்கு ஒழுக்கம், சமுதாய சிந்தனை, சமூக நல்லிணக்கம் ஆகியவைகளை கற்றுத்தரவேண்டும். சமத்துவ எண்ணங்களை மனதில் விதைக்க வேண்டும். அப்பொழுதுதான் சிறந்த ஒரு சமுதாயமாக நாம் விளங்கமுடியும். நேர்மையான அரசு நிர்வாகத்துடன், கட்டுக்கோப்பான சமுதாயமும் இருக்க வேண்டும்.
அதிஉன்னத பாரதம், ஒவ்வொரு காலத்திற்கேற்ப பல்வேறு தரப்பினரும் வரவேற்கும் வகையில் தன்னை புனரமைத்துக்கொண்டே வருகிறது. சமுதாயத்தில் உள்ள அனைவரும் இதற்கு தயாராக இருத்தல் அவசியம். 1925 முதல் ஆர்.எஸ்.எஸ். இந்த பணியைத்தான் செய்து வருகிறது. 93ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சங்கத்தில் இருக்கும் கார்யகர்தர்கள் இந்தப்பணியையே செய்கிறார்கள். 1 லட்சத்தி எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட சேவை பணிகள் தேசம் முழுவதும் ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்பட்டு வருகிறது. தாங்கள் தினமும் வணங்கும் இந்த தாய்நாட்டின் மேன்மைக்காக பல்வேறு தியாகங்களை செய்து வருகிறார்கள், தேசத்தை உயர்ந்த நிலையில் காண வேண்டும் என்பதே அவர்கள் அனைவரது எதிர்பார்ப்பு. அனைவரும் ஒன்றிணைந்து பணிகளை சேர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் பாரதம் உலகின் குருவாக உருவெடுக்கும்.
பாரத் மாதா கி ஜெ