கமலஹாசன் அரசியலுக்கு வருவது நன்மையே தரும் என்பது எனது எண்ணம். கமல்ஹாசன் சிறந்த தலைவரா என்று எனக்கு தெரியாது, ஆனால் நான் கமலஹாசனை வரவேற்பதன் காரணம் வேறு.
தமிழக அரசியலிலிருந்து இன்றைக்கும் பிரிக்க முடியாத ஒரு வார்த்தை திராவிடம். ஆரியம் - திராவிடம் என்பது கட்டுக்கதை என்று 120 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்வாமி விவேகானந்தர் தெளிவுபடுத்திவிட்டார். "நாங்கள் பகுத்தறிவாளர்கள், விவேகானந்தர் ஒரு ஹிந்துத்வா ஆள், அவர் சொல்வதை ஏற்கமுடியாது" என்று கூறுபவர்கள், அம்பேத்கர் சொல்வதையாவது கேட்டிருந்தால் ஆரியன் - திராவிடன் என்று பேசியிருக்க மாட்டார்கள். அம்பேத்கர் பல நூல்களை ஆராய்ந்து தெளிவாக "ஆரிய படையெடுப்பு என்பதே சுத்த பொய், பிரிட்டிஷ்க்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியே இது" என்று சொல்லிவிட்டார்.
ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவு தந்த ஈ.வெ.ரா. அத்துடன் திராவிடஸ்தான் வேண்டும் என்று கேட்டார். பிரிட்டிஷ் ஆட்சி தொடரவேண்டும் என்று விரும்பினார், சுதந்திர தினத்தை துக்க தினம் என்றார் ஈ.வெ.ரா. ஜாலியன் வாலா படுகொலையை அனைவரும் கண்டித்த நிலையில், நீதி கட்சி அந்த படுகொலை தவறே இல்லை என்கிற நிலை எடுத்ததாக அன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா (மும்பை) நாளேட்டில் செய்தி வந்ததாகவும் கூட கூறப்படுகிறது. (நீதி கட்சி அந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள், எனவே இவ்விஷயத்தில் மட்டும் அக்கட்சியின் நிலை பற்றி உறுதியாக தெரியவில்லை)
வடக்கில் ஹிந்து முஸ்லீம் என்று பிரித்த பிரிட்டிஷ், தெற்கில் எடுத்த ஆயுதம் ஆரியம் - திராவிடம். இதை ஏந்திய பலரில் ஒருவர் ஈ.வெ.ரா.. திராவிடம் என்பது மொழி பற்று என்று இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை, கடவுள் மறுப்பு என்றுக்கூட இருந்திருக்கலாம், கவலை இல்லை, ஏனெனில் நாத்திகமும் ஹிந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையே. ஆனால் பிரிவினை, தமிழ் தேசியம், ஹிந்து துவேஷம், பிராமண எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு என்று திராவிடம் திசை மாறியதே பிரச்சனை.
ஈ.வெ.ரா வின் திராவிடம் என்பது தனி நாடு கோரிக்கை, பிள்ளையார் உடைப்பு, பூணூல் அறுப்பு. இந்த அனைத்து கொள்கைகளையும் அப்படியே முதலில் ஏற்ற அண்ணாதுரை பிரிவினைவாதத்தை வேறு வழியில்லாமல் விட்டார், பின்னர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார், காங்கிரஸ் ஓட்டை பிரிப்பதற்காக "நான் பிள்ளையாரையும் உடைக்கமாட்டேன்,தேங்காயும் உடைக்கமாட்டேன்" என்றார், தான் ஒரு செக்குலர் ஆள் என்று காட்டிக்கொண்டார்.
அவருக்கு பிறகு வந்த கருணாநிதி பற்றி அனைவருக்குமே தெரியும். ஈ.வெ.ரா. கொள்கை கொஞ்சம், அண்ணாதுரை கொஞ்சம், விடுதலை புலிகள் கொஞ்சம், ஹிந்து துவேஷம் கொஞ்சம், மைனாரிட்டி பாசம் கொஞ்சம், ஊழல் நிறைய என்று ஒரு அவியலாக இருந்தார். ஹிந்து என்றால் திருடன், தீ மிதிப்பது காட்டுமிராண்டித்தனம், ராமர் எந்த காலேஜில் படித்தார் என்றெல்லாம் பேசி காலத்தை ஓட்டியவர். ஆனால் உண்மையில் அவரை பாராட்டுகிறேன், தனது கட்சியில் இருப்பவர்களில் 90 சதவிகிதம் பேர் ஹிந்துக்கள் என்பதை அறிந்தும், "நீங்கள் எல்லாம் முட்டாள்கள், உங்கள் கடவுள்கள் எல்லாம் வெறும் கற்கள்" என்று பேசியும் அவர்கள் கருணாநிதியை எதிர்த்து கேட்டதும் இல்லை, மாறி ஒட்டு போட்டதும் இல்லை.
நல்ல வேளையாக எம்,ஜிஆர். அதிமுக வை ஆரம்பித்து திமுகவை ஓரமாக உட்கார வைத்தார். அவர் இறுதி வரை நல்ல ஆட்சியாளராக இருந்தார், குறிப்பாக அவர் ஒருபோதும் பிரிவினை பேசுவது, ஹிந்து எதிர்ப்பு, கடவுள் மறுப்பு என்றெல்லாம் பேசி மக்களின் நம்பிக்கையுடன் விளையாட வில்லை. அவரது திராவிடம் ஓரளவு மெருகேறிய திராவிடம். ஜெயலலிதாவும் அப்படியே, கடைசிவரை ஒரு தேசியவாதியாகவே வாழ்ந்து மறைந்தார். ஜெ உயிருடன் இருக்கும்பொழுதும் பிரிவினைவாத குழுக்கள் முளைத்தப்படிதான் இருந்தது, ஆனால் அவற்றையெல்லாம் தட்டி வைத்தார். தமிழ் தேசியம் அமைப்போம், தமிழ் குடியரசு அமைப்போம் என்று இப்பொழுது கூறும் காளான்கள் அப்பொழுது அடங்கியே இருந்தார்கள்.
ஜெ இல்லாததை திமுக பயன்படுத்த நினைக்கிறது. திமுகவின் வரலாறு பற்றி ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. என்ன செய்தால் ஆட்சிக்கு வரலாம் என்று கணக்கு போடும் ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் அந்த புத்தகத்தின் ஏதோ ஒரு புத்தகத்தை படித்துவிட்டு நீட், ஜல்லிக்கட்டு, ஹிந்தி எதிர்ப்பு, காவிரி, மைனாரிட்டி பாசம் என்று ஏதேதோ செய்து பார்க்கிறார். பிரிவினை பேசினால் கட்சி அங்கீகாரம் போகும் என்பதால் அல்லக்கை அமைப்புக்கள் வைத்து பிரிவினை கோஷத்தையும் எழுப்பி வருகிறார். அவர் தந்தை செய்த ஊசிப்போன பழைய அவியலை, சுட வைத்து பரிமாற நினைக்கிறார். இந்த திமுக வீழ்த்தப்பட வேண்டும்.
எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவும் இப்பொழுதுள்ள அதிமுகவும் ஒன்றல்ல. திமுகவையோ மற்ற சுண்டைக்காய்களையோ வீழ்த்தும் ஆற்றல் அதற்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதிமுக என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. ஏதோ ஆட்சி நடக்கிறது அவ்வளவுதான். EPS OPS ஒன்றும் சத்தியவான்கள் இல்லை, சசிகலா பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எனவே அதுவும் போக வேண்டிய கட்சிதான்.
திமுக தலைமை தான் தவறு, அதன் தொண்டர்கள், ஆதரவாளர்கள் ஒரு குற்றமும் இல்லாதவர்கள், பாரம்பரியங்களை மதிப்பவர்கள், தேசிய சிந்தனையும் உடையவர்கள்தான் திமுக தொண்டர்கள். அவர்களுக்கு அதிமுக பிடிக்காது, எனவே வேறு வழி இல்லாமல் திமுகவில் ஒட்டியிருக்கிறார்கள். அதிமுக தொண்டர்களும் மனமில்லாமல் கட்சியில் இருக்கிறார்கள். பொதுமக்களோ பழக்க தோஷத்திற்காக இருவருக்கும் ஓட்டுப்போட்டு கொண்டு இருக்கிறார்கள். வேறு நல்ல தலைமை உருவானால் இவர்கள் அங்கே செல்ல தயங்கமாட்டார்கள். 2006ல் விஜயகாந்த் ஒரு மாற்றாக தெரிந்ததால் தான் 10% ஓட்டுக்கள் வாங்கினார். இப்பொழுது விஜயகாந்த் வலுவிழந்துவிட்டதால்,மாற்றிடம் வெற்றிடமாக உள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு பல பிரிவினை கும்பல்களுக்கு தைரியம் வந்துள்ளது. இந்த கும்பலிலும் பல இளைஞர்கள் உள்ளனர். இங்கும் தலைமை தான் ஆபத்தே தவிர, அடிமட்டத்தில் உள்ள அனைவரும் தவறானவர்கள் இல்லை, பலர் அப்பாவிகளே. இவர்களில் பலருக்கு எது சரி, எது தவறு என்றே தெரியாததால்தான் பிரச்சனை, வழிகாட்ட ஒரு அரசியல் தலைமை இங்கு இல்லை. இவர்களை தேசிய நீரோட்டத்தில் ஈர்க்கும் அளவிற்கு காங்கிரஸோ அல்லது பாஜகவோ தமிழகத்தில் வலுவாக இல்லை என்பதே உண்மை. (காங்கிரஸ் தேசியத்தன்மையுடன் இருக்கிறதா என்கிற விவாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை). மேலே சொன்ன இளைஞர்கள் சக்தி மிகப்பெரியது, இதை ஆக்கபூர்வமாக உபயோகிக்க வேண்டும்.
மோடியால் ஈர்க்கப்பட்டு, ஆர்.எஸ்.எஸ். கொள்கையால் கவரப்பட்டு பலர் தேசியத்துடன் இணைந்து உள்ளார்கள். ஆனால் இது மட்டும் பத்தாது. ஏனென்றால் பிரிவினை கும்பல் பலமாக உள்ளது. இந்த கும்பலை எதிர்க்க மேலும் பல தேசிய சிந்தனை கொண்டவர்கள் அணி திரள வேண்டும். ரஜினி தேசியவாதி போல தெரிகிறார். கமலஹாசன் அவ்வப்பொழுது ஏதோ உளறினாலும் தேச விரோதி, மத துவேஷி போல தெரியவில்லை. நாத்திகம் பேசுகிறார், இருக்கட்டும் அதுவும் ஹிந்து தர்மத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்காது, அதற்கென்ன செய்ய முடியும், கன்றுக்குட்டி அங்கும் இங்கும் ஓடத்தான் செய்யும், சில நாட்கள் கழித்து அமைதியடையும்.
ரஜினி, கமல் ஆகியோர் நேரடி அரசியல் மூலமாகவோ, மறைமுக அரசியல் மூலமாகவோ தமிழகத்தின் இளைஞர் சக்தியை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் பாலமாக இருப்பார்கள் என்று சொல்லலாம் . துவேஷம் இல்லாத, பிரிவினை இல்லாத திராவிடம் என்கிற கொள்கை அடிப்படையில் கமல் ஒரு கட்சி ஆரம்பித்தால் அது வரவேற்கப்பட வேண்டியதே. அவர் கட்சி நல்ல திராவிட கட்சியாக இருக்குமா என்று தெரியாது, ஆனால் திமுக, அதிமுக மற்ற சுண்டைக்காய் கட்சிகளை விட மோசமாக இருக்காது என்று சொல்லலாம்.
தமிழகத்தில் வீழ்த்தப்பட்ட வேண்டிய கட்சிகள் திமுக, அதிமுக மற்றும் நேற்று முளைத்த காளான்கள். இதை பாஜகவோ, ரஜினியோ, கமலோ யார் செய்தாலும் நன்மையே, தனியாக செய்தாலும் சரி, ஒருவருக்கொருவர் போட்டி போட்டு செய்தாலும் சரி, ஒன்று சேர்ந்து செய்தாலும் சரி, தமிழ்நாட்டிற்கு நல்லதே.
No comments:
Post a Comment