Saturday, September 30, 2017

விவசாயிகள் நலன், சமுதாய நல்லிணக்கம், தேச பாதுகாப்பு, பசுபாதுகாப்பு, காஷ்மீர் குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு

விவசாயிகள் முன்னேற்றம், சமுதாய நல்லிணக்கம்,  பசுபாதுகாப்பு, அரசின் நலத்திட்டங்கள், நீர் மேலாண்மை,  தேச பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் திரு மோஹன் ஜி பாகவத் தனது விஜயதசமி உரையில் குறிப்பிட்டார்.

அதன் சாராம்சம் இதோ (என்னால் இயன்றளவிற்கு தமிழில் தந்துள்ளேன், ஏதேனும் குறைகள் இருப்பின், மன்னிக்கவும்)

தேசிய கண்ணோட்டமே நமது  பாரம்பரியம்.  நமது சமுதாயம் தேசிய சிந்தனைக்கொண்டதாக இருக்கவேண்டுமென்றால்நமது சிந்தனையாளர்களும்அறிஞர்களும் காலனிய மனோபாவத்தை விட்டொழிக்கவேண்டும்.   

ஐரோப்பாவில் பிறந்துஅதன் கலாச்சாரத்தில் வளர்ந்தபொழுதும்பாரத நாட்டு மக்களின்  மனம்,  பண்பாடுகலாச்சாரம் ஆகியற்றுடன் ஒன்றிணைந்துதனது சேவை பணிகளை இங்கே வெற்றிகரமாக செய்த சகோதரி நிவேதிதை,  நமது பாரம்பரியங்கள் மற்றும் தேசிய சிந்தனைகளுடன் நாமும் ஒன்றி இருக்கவேண்டியதற்கு உத்வேகியாக இருக்கிறார்

ஒரு தேசம் என்பது செயற்கையாக உருவாவதில்லை.  மற்ற நாடுகளை போல   இல்லாமல்நமது மக்கள் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் பாரதம் அமைந்துள்ளதுபல்வேறு பிராந்தியங்கள்இனம்மொழிமதம்ஜாதிபாரம்பரியங்கள் என்று இருந்தாலும் நமது கலாச்சாரம் நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.

நமது முயற்சியால் யோகக்கலையை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளதுசுற்றுசூழல் குறித்த நமது அணுகுமுறைக்கு வரவேற்பு கிடைத்துள்ளதுநமது பாரம்பரியங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவருவதை பார்க்கையில் நமக்கு பெருமிதம் ஏற்படுகிறது. 


எல்லையில் தீவிரவாத ஊடுருவல்களை முறியடித்தது மற்றும் எல்லைக்கு அப்பாலிருந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி தருவது போன்ற விஷயங்களை மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்அனைத்து பாதுகாப்பு படைகளுக்கும்அவர்களது கடமைகளை செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது

பாகிஸ்தானும் சீனாவும் செய்த அத்துமீறல்களைநாம் உறுதியாக எதிர்கொண்டுள்ளோம்டோக்லாம் விவகாரம் மற்றும் சர்வதேச அளவிலான ராஜதந்திர நடவடிக்கைகளை நாம் சிறப்பாக கையாண்டுள்ளோம்.  

காஷ்மீரில் ஹிந்துக்கள் பல ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக அகதிகள் போல வாழுகின்றனர். அவர்கள் சந்தோஷமான, கண்ணியமான, பாதுகாப்பான வாழ்க்கை வாழ நாம் வழி வகை செய்யவேண்டும். ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் வளர்ச்ப்பணிகளை எடுத்து செல்ல வேண்டும் 

ரோஹிங்கியாக்கள் வன்முறையாளர்கள், குற்றப்பின்னணி கொண்டவர்கள், பிரிவினைவாதிகள், பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடையவர்கள். இதனால்தான் மியான்மரிலிருந்து ரோஹிங்கியாக்கள் துரத்தியடிக்கப்பட்டார்கள். இவ்விவகாரத்தில் தேசத்தின் பாதுகாப்பை மனதில் வைத்து முடிவெடுக்க வேண்டும். 

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு போன்ற மகத்தான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மண் பரிசோதனை, வேளாண் பொருட்களுக்கான இணைய வழி சந்தை, போன்றவை சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள கச்சிதமான நடவடிக்கைகள். எனினும் இந்த திட்டங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடைகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

சிறியதும், பெரியதுமாக பல துறைகளில், சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ள அதே வேளையில், அவர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.  விண்வெளி துறை, உள்நாட்டு பாதுகாப்பு, கட்டமைப்பு துறை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவை சிறப்பாக செயல்படுகிறது.   தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம்குடிமக்கள் மத்தியில் கடமையுணர்வு ஏற்பட்டுள்ளது

விவசாயிகள்  தங்கள் குடும்பத்தை வளமாக நடத்தும் அளவிற்கும், அடுத்த ஆண்டு பயிர் செய்ய முதலீடு இருக்கும் வகையிலும் வருமானம் கிடைக்கப்பெறவேண்டும்.  விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தையை பயன்படுத்தும் அதே வேளையில், மாசில்லாத பாரம்பரிய  முறைகளையும் பயன்படுத்த வேண்டும். மாடுகளை வைத்து விவசாயம் மேற்கொள்வதால்  குறைந்த முதலீட்டில் அதிக மகசூல் ஈட்ட முடியும் 

பசு பாதுகாப்பு நமது அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. பசு பாதுகாப்பு தொடர்பாக  பல மாநிலங்களில் ஆட்சியிலிருந்த வெவ்வேறு கட்சிகள் சட்டம் இயற்றியிருக்கின்ற்ன.  பசுபாதுகாப்பு தொடர்பான வேலைகள் சட்ட வரம்பிற்கு உட்பட்டும், அரசியலமைப்பிற்கு உட்பட்டும் நடக்க வேண்டும்.  

பசுபாதுகாப்பு தொடர்பாக நடந்த வன்முறை சம்பவங்களுக்கும், பசுபாதுகாப்பு தொண்டர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.  பசுபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பலர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பசுபாதுகாப்பு பணியில் இஸ்லாமியர்களும் ஈடுபட்டுள்ளனர்.  இவ்விஷயத்தில்  பொய் பிரச்சாரம் செய்து ஹிந்து - முஸ்லீம் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாக இஸ்லாமியர்கள் என்னிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.


ஜன்தன் திட்டம், முத்ரா திட்டம், எரிவாயு மானியம், விவசாய காப்பீடு திட்டங்கள் பொதுமக்களுக்கு மிக்க பயனுடையவையாக உள்ளது. இத்துடன் தொழில்துறை, விவசாயம், சமூக சூழல் என அனைத்திற்குமேற்ற கொள்கைகளை வகுப்பது அவசியம். சிறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், சிறு மற்றும் குறுந்தொழில்கள், சிறு மற்றும் பெரு வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் இக்கொள்கைகள் இருக்க வேண்டும். 

சுதேசி பொருட்களை மட்டுமே வாங்கவேண்டும் என்கிற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட வேண்டும்.

சிறு, குறுந்தொழில்கள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகள், சில்லறை வர்த்தகம், கைவினை துறை, கூட்டுறவுத்துறை ஆகியவற்றின் மூலம் கோடிக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.  இத்துறைகளை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும்.

பட்டியிலனத்தவர்கள், பழங்குடியின மக்கள் ஆகியோருக்காக மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் பல உள்ளன. இவைகள் அவர்களை உரிய முறையில் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்.

பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நீர் மேலாண்மை மற்றும் சுற்றுசூழல்  பாதுகாப்பு தொடர்பாக மகத்தான பணிகள் செய்து வருகிறார்கள்.  'நதிகளுக்காக இணைவோம்' போன்ற திட்டங்கள் சிறப்பானவை. 

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நமது கல்விமுறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.  நமது மக்கள் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை அது ஏற்படுத்திவிட்டது. நமது கல்விமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு அறிவாற்றலையும், தன்னம்பிக்கையும், தேசிய சிந்தனையையும் அளிக்க வேண்டும்.   கிராமங்கள், மலைப்பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கும் இத்தகைய தரமான கல்வி குறைந்த கட்டணத்தில் சென்றடைய வேண்டும்.

குடும்பங்களில் அமைதியும் ஒற்றுமையும் நிலவ வேண்டும். பெரியவர்கள் சிறியவர்களுக்கு ஒழுக்கம், சமுதாய சிந்தனை, சமூக நல்லிணக்கம் ஆகியவைகளை கற்றுத்தரவேண்டும்.  சமத்துவ எண்ணங்களை மனதில் விதைக்க வேண்டும். அப்பொழுதுதான் சிறந்த ஒரு சமுதாயமாக நாம் விளங்கமுடியும்.   நேர்மையான அரசு நிர்வாகத்துடன், கட்டுக்கோப்பான சமுதாயமும் இருக்க வேண்டும்.

அதிஉன்னத பாரதம், ஒவ்வொரு காலத்திற்கேற்ப பல்வேறு தரப்பினரும் வரவேற்கும் வகையில் தன்னை புனரமைத்துக்கொண்டே வருகிறது.   சமுதாயத்தில் உள்ள அனைவரும் இதற்கு தயாராக இருத்தல் அவசியம். 1925 முதல் ஆர்.எஸ்.எஸ். இந்த பணியைத்தான் செய்து வருகிறது.  93ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சங்கத்தில் இருக்கும் கார்யகர்தர்கள் இந்தப்பணியையே செய்கிறார்கள். 1 லட்சத்தி எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட சேவை பணிகள் தேசம் முழுவதும் ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்பட்டு வருகிறது.  தாங்கள் தினமும் வணங்கும்  இந்த தாய்நாட்டின் மேன்மைக்காக பல்வேறு தியாகங்களை செய்து வருகிறார்கள், தேசத்தை உயர்ந்த நிலையில் காண வேண்டும் என்பதே அவர்கள் அனைவரது எதிர்பார்ப்பு. அனைவரும் ஒன்றிணைந்து பணிகளை சேர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் பாரதம்  உலகின் குருவாக உருவெடுக்கும்.


பாரத் மாதா கி ஜெ 

Sunday, September 24, 2017

வரவேண்டும் நவோதயா பள்ளிக்கூடங்கள்

 பள்ளிக்கூடங்களை நோக்கி ஏழைகள் வரவில்லையென்றால், ஏழைகளை நோக்கி பள்ளிக்கூடங்கள் செல்லவேண்டும் என்கிற விவேகானந்தரின் கூற்றுக்கு ஏற்ப, 1985ல் அப்பொழுதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் கொண்டுவரப்பட்ட அற்புதமான திட்டம்தான் ஜவஹர் நவோதயா பள்ளிக்கூடங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமப்புறங்களில் அதுவும் குறிப்பாக பட்டியியலினத்தவர் அதிகம் வாழும் பகுதிகளில், மாணவர்களுக்கு தரமான கல்வியை,மிக மிக குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.

தமிழகம் தவிர்த்து மற்ற அனைத்து மாநிலகங்களிலும் நவோதயா பள்ளிகள் உள்ளன. கடந்த ஆண்டு புள்ளி விவரப்படி 598 நவோதயா பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மலைவாழ் மக்களுக்கென்றே பிரத்யேக பள்ளி ஒன்று திரிபுராவில் இயங்கிவருகிறது.

இது ஒரு உறைவிட பள்ளி. ஒவ்வொரு பள்ளியிலும்  6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் 80 மாணவர்கள் (2 செக்ஷன்கள், ஒரு செக்ஷனுக்கு 40 குழந்தைகள்).  6 முதல் 8ம் வகுப்பு வரை முற்றிலும் இலவசம், அதன் பிறகு மாதம் 200 ரூபாய் மட்டுமே கட்டணம். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளோர், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு அதுவும் இல்லை. கல்வியின் தரமோ அதி அற்புதம்.  அத்துடன் நூலகம், கணினி ஆய்வகம் , கால்பந்து, வாலிபால், நீச்சல், ஹாக்கி, கிரிக்கெட், கபடி போன்றவற்றிலும் பயிற்சிகள் உண்டு.

இதில் சேர நுழைவு தேர்வு நடத்தப்படும், அதில் வெற்றிபெறும் மாணவர் மட்டுமே சேர முடியும். (இன்று அநேக பள்ளிகளில் இடை வகுப்புக்களில் சேர நுழைவு தேர்வு உள்ளது).   6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாநில மொழியில் பாடம் நடத்தப்படும் (இங்கே தமிழ் மீடியம்). 9ம் வகுப்பு முதல் இங்கிலிஷ் மீடியம். ஹிந்தி மூன்றாவது பாடமாக உள்ளது.  இட ஒதுக்கீடு என்று பார்த்தால் கிராமப்புற மாணவர்களுக்கு 75% உள்ளது. பட்டியல் இனத்தவருக்கு 15%, பழங்குடி இனத்தவருக்கு 7.5%, மாற்றுத்திறனாளிகளுக்கு 3.5%, பெண்களுக்கு 33% என்று உண்டு.  

இலவச கல்வி கொடு என்று போராடும் கட்சிகள் இந்த நவோதயா பள்ளிகளை ஏன் எதிர்க்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. எதிர்ப்பாளர்கள் சொல்லும் ஒரு  முக்கிய காரணம் ஹிந்தி திணிப்பு என்கிறார்கள். ஹிந்தி பேசாத மாநிலங்களில் 8ம் வகுப்பு வரை  பிராந்திய மொழிலியே பாடம் நடத்தப்படும் என்று சொல்லியாகிவிட்டது,   ஹிந்தி மூன்றாவது பாடம் மட்டுமே. (ஹிந்திக்கு தேர்வு கூட இல்லை) .

ஒவ்வொரு பள்ளிக்கும் மத்திய அரசு ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு நவோதயா பள்ளிகள் நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.  இது ஒரு அற்புதமான திட்டம் என்பதால்தான், காங் கொண்டு வந்தபோதும் பாஜகவோ, கம்யூனிஸ்ட்களோ ஏற்றுக்கொண்டார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தான் மக்களை முட்டாளாகவே வைத்திருக்க எண்ணிய திராவிட கட்சிகள் இதை எதிர்த்தன.  இருக்கும் திராவிட கட்சிகள் பத்தாது என்று சீமான், திருமா உட்பட பல கோமாளிகள் புறப்பட்டுள்ளார்கள்.  இவர்கள் நவோதயாவை எதிர்க்க ஒரே காரணம், தங்கள் கட்சியின் எதிர்காலத்தை நினைத்துதான். 

அனைவரும் படித்து புத்திசாலியாகிவிட்டால் இந்த கோமாளிகள் பின்னால் யாரும் செல்லமாட்டார்கள். பிறகு போஸ்டர் யார் ஓட்டுவார்கள்? பேனர் யார் வைப்பார்கள்? நாற்காலி யார் அடுக்கறது? எடுபிடி யார் செய்வது?  எப்படி கட்சி நடத்தறது? இந்த கவலை தான் இவர்களை ஒவ்வொரு நல்ல திட்டத்திற்கும் எதிர்ப்பு காட்ட தூண்டுகிறது.

தமிழனை முன்னேறிவிட்டால் தங்கள் பாடு திண்டாட்டம் என்று கருதி நல்ல விஷயங்களை தடுக்கும் கட்சிகளும், சில்லரை அமைப்புகளும் தான் தமிழ்நாட்டின் துரோகிகள்.

Saturday, September 23, 2017

கமலஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது

கமலஹாசன் அரசியலுக்கு வருவது நன்மையே தரும் என்பது எனது எண்ணம். கமல்ஹாசன் சிறந்த தலைவரா என்று எனக்கு தெரியாது, ஆனால் நான் கமலஹாசனை வரவேற்பதன் காரணம் வேறு.

தமிழக அரசியலிலிருந்து இன்றைக்கும் பிரிக்க முடியாத ஒரு வார்த்தை திராவிடம். ஆரியம் - திராவிடம் என்பது கட்டுக்கதை என்று 120 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்வாமி விவேகானந்தர் தெளிவுபடுத்திவிட்டார்.  "நாங்கள் பகுத்தறிவாளர்கள், விவேகானந்தர் ஒரு ஹிந்துத்வா ஆள், அவர் சொல்வதை ஏற்கமுடியாது" என்று கூறுபவர்கள், அம்பேத்கர் சொல்வதையாவது கேட்டிருந்தால் ஆரியன் - திராவிடன் என்று பேசியிருக்க மாட்டார்கள். அம்பேத்கர் பல நூல்களை ஆராய்ந்து தெளிவாக "ஆரிய படையெடுப்பு என்பதே சுத்த பொய், பிரிட்டிஷ்க்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியே இது" என்று சொல்லிவிட்டார்.

ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவு தந்த ஈ.வெ.ரா. அத்துடன் திராவிடஸ்தான் வேண்டும் என்று கேட்டார்.  பிரிட்டிஷ் ஆட்சி தொடரவேண்டும் என்று விரும்பினார், சுதந்திர தினத்தை துக்க தினம் என்றார் ஈ.வெ.ரா.   ஜாலியன் வாலா படுகொலையை அனைவரும் கண்டித்த நிலையில்,  நீதி கட்சி அந்த படுகொலை தவறே இல்லை என்கிற நிலை எடுத்ததாக அன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா (மும்பை) நாளேட்டில் செய்தி வந்ததாகவும் கூட கூறப்படுகிறது. (நீதி கட்சி அந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள், எனவே இவ்விஷயத்தில் மட்டும் அக்கட்சியின் நிலை பற்றி உறுதியாக தெரியவில்லை)

வடக்கில் ஹிந்து முஸ்லீம் என்று பிரித்த பிரிட்டிஷ், தெற்கில் எடுத்த ஆயுதம் ஆரியம் - திராவிடம். இதை ஏந்திய பலரில் ஒருவர் ஈ.வெ.ரா..  திராவிடம் என்பது மொழி பற்று என்று இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை,  கடவுள் மறுப்பு என்றுக்கூட இருந்திருக்கலாம், கவலை இல்லை, ஏனெனில் நாத்திகமும் ஹிந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையே. ஆனால் பிரிவினை, தமிழ் தேசியம், ஹிந்து துவேஷம், பிராமண எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு என்று திராவிடம் திசை மாறியதே பிரச்சனை. 

ஈ.வெ.ரா வின் திராவிடம் என்பது தனி நாடு கோரிக்கை, பிள்ளையார் உடைப்பு, பூணூல் அறுப்பு.   இந்த அனைத்து கொள்கைகளையும் அப்படியே முதலில் ஏற்ற அண்ணாதுரை பிரிவினைவாதத்தை வேறு வழியில்லாமல் விட்டார்,  பின்னர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார், காங்கிரஸ் ஓட்டை பிரிப்பதற்காக "நான் பிள்ளையாரையும் உடைக்கமாட்டேன்,தேங்காயும் உடைக்கமாட்டேன்" என்றார்,  தான் ஒரு செக்குலர் ஆள் என்று காட்டிக்கொண்டார். 

அவருக்கு பிறகு வந்த கருணாநிதி பற்றி அனைவருக்குமே தெரியும். ஈ.வெ.ரா. கொள்கை கொஞ்சம், அண்ணாதுரை கொஞ்சம், விடுதலை புலிகள் கொஞ்சம், ஹிந்து துவேஷம் கொஞ்சம், மைனாரிட்டி பாசம் கொஞ்சம், ஊழல் நிறைய என்று ஒரு அவியலாக இருந்தார்.  ஹிந்து என்றால் திருடன், தீ மிதிப்பது காட்டுமிராண்டித்தனம், ராமர் எந்த காலேஜில் படித்தார் என்றெல்லாம் பேசி  காலத்தை ஓட்டியவர்.  ஆனால் உண்மையில் அவரை பாராட்டுகிறேன், தனது கட்சியில் இருப்பவர்களில் 90 சதவிகிதம் பேர் ஹிந்துக்கள் என்பதை அறிந்தும், "நீங்கள் எல்லாம் முட்டாள்கள், உங்கள் கடவுள்கள் எல்லாம் வெறும் கற்கள்" என்று பேசியும் அவர்கள் கருணாநிதியை எதிர்த்து கேட்டதும் இல்லை, மாறி ஒட்டு போட்டதும் இல்லை.

நல்ல வேளையாக எம்,ஜிஆர். அதிமுக வை ஆரம்பித்து திமுகவை ஓரமாக உட்கார வைத்தார்.  அவர் இறுதி வரை நல்ல ஆட்சியாளராக இருந்தார், குறிப்பாக அவர் ஒருபோதும் பிரிவினை பேசுவது, ஹிந்து எதிர்ப்பு, கடவுள் மறுப்பு என்றெல்லாம் பேசி மக்களின் நம்பிக்கையுடன் விளையாட வில்லை. அவரது திராவிடம் ஓரளவு மெருகேறிய திராவிடம். ஜெயலலிதாவும் அப்படியே,  கடைசிவரை ஒரு தேசியவாதியாகவே வாழ்ந்து மறைந்தார். ஜெ உயிருடன் இருக்கும்பொழுதும் பிரிவினைவாத குழுக்கள் முளைத்தப்படிதான் இருந்தது, ஆனால் அவற்றையெல்லாம் தட்டி வைத்தார்.  தமிழ் தேசியம் அமைப்போம், தமிழ் குடியரசு அமைப்போம் என்று இப்பொழுது கூறும் காளான்கள் அப்பொழுது அடங்கியே இருந்தார்கள்.

ஜெ இல்லாததை திமுக பயன்படுத்த நினைக்கிறது. திமுகவின் வரலாறு பற்றி ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. என்ன செய்தால் ஆட்சிக்கு வரலாம் என்று கணக்கு போடும் ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் அந்த புத்தகத்தின் ஏதோ ஒரு புத்தகத்தை படித்துவிட்டு  நீட், ஜல்லிக்கட்டு, ஹிந்தி எதிர்ப்பு, காவிரி, மைனாரிட்டி பாசம் என்று ஏதேதோ செய்து பார்க்கிறார்.  பிரிவினை பேசினால் கட்சி அங்கீகாரம் போகும் என்பதால் அல்லக்கை அமைப்புக்கள் வைத்து பிரிவினை கோஷத்தையும் எழுப்பி வருகிறார்.  அவர் தந்தை செய்த ஊசிப்போன பழைய அவியலை, சுட வைத்து பரிமாற நினைக்கிறார்.  இந்த திமுக வீழ்த்தப்பட வேண்டும்.  

எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவும் இப்பொழுதுள்ள அதிமுகவும் ஒன்றல்ல. திமுகவையோ மற்ற சுண்டைக்காய்களையோ வீழ்த்தும் ஆற்றல் அதற்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதிமுக என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. ஏதோ ஆட்சி நடக்கிறது அவ்வளவுதான். EPS OPS ஒன்றும் சத்தியவான்கள் இல்லை, சசிகலா பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.  எனவே அதுவும் போக வேண்டிய கட்சிதான்.

திமுக தலைமை தான் தவறு, அதன் தொண்டர்கள், ஆதரவாளர்கள் ஒரு குற்றமும் இல்லாதவர்கள், பாரம்பரியங்களை மதிப்பவர்கள், தேசிய சிந்தனையும் உடையவர்கள்தான் திமுக தொண்டர்கள். அவர்களுக்கு அதிமுக பிடிக்காது, எனவே வேறு வழி இல்லாமல் திமுகவில் ஒட்டியிருக்கிறார்கள். அதிமுக தொண்டர்களும் மனமில்லாமல் கட்சியில் இருக்கிறார்கள். பொதுமக்களோ பழக்க தோஷத்திற்காக இருவருக்கும் ஓட்டுப்போட்டு கொண்டு இருக்கிறார்கள்.  வேறு நல்ல தலைமை உருவானால் இவர்கள்  அங்கே செல்ல தயங்கமாட்டார்கள். 2006ல் விஜயகாந்த் ஒரு மாற்றாக தெரிந்ததால் தான் 10% ஓட்டுக்கள் வாங்கினார். இப்பொழுது விஜயகாந்த் வலுவிழந்துவிட்டதால்,மாற்றிடம் வெற்றிடமாக உள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு பல பிரிவினை கும்பல்களுக்கு தைரியம் வந்துள்ளது.  இந்த கும்பலிலும் பல இளைஞர்கள் உள்ளனர். இங்கும் தலைமை தான் ஆபத்தே தவிர, அடிமட்டத்தில் உள்ள அனைவரும் தவறானவர்கள் இல்லை, பலர் அப்பாவிகளே.  இவர்களில் பலருக்கு எது சரி, எது தவறு என்றே தெரியாததால்தான் பிரச்சனை, வழிகாட்ட ஒரு அரசியல் தலைமை இங்கு இல்லை.  இவர்களை தேசிய நீரோட்டத்தில் ஈர்க்கும் அளவிற்கு காங்கிரஸோ அல்லது பாஜகவோ தமிழகத்தில் வலுவாக இல்லை என்பதே உண்மை. (காங்கிரஸ் தேசியத்தன்மையுடன் இருக்கிறதா என்கிற விவாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை).  மேலே சொன்ன இளைஞர்கள் சக்தி மிகப்பெரியது, இதை ஆக்கபூர்வமாக உபயோகிக்க வேண்டும்.

மோடியால் ஈர்க்கப்பட்டு, ஆர்.எஸ்.எஸ். கொள்கையால்  கவரப்பட்டு பலர் தேசியத்துடன் இணைந்து உள்ளார்கள். ஆனால் இது மட்டும் பத்தாது. ஏனென்றால் பிரிவினை கும்பல் பலமாக உள்ளது. இந்த கும்பலை எதிர்க்க மேலும் பல தேசிய சிந்தனை கொண்டவர்கள் அணி திரள வேண்டும். ரஜினி தேசியவாதி போல தெரிகிறார். கமலஹாசன் அவ்வப்பொழுது ஏதோ உளறினாலும் தேச விரோதி, மத துவேஷி  போல தெரியவில்லை.  நாத்திகம் பேசுகிறார், இருக்கட்டும் அதுவும் ஹிந்து தர்மத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான்.  சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்காது, அதற்கென்ன செய்ய முடியும், கன்றுக்குட்டி அங்கும் இங்கும் ஓடத்தான் செய்யும், சில நாட்கள் கழித்து அமைதியடையும்.

ரஜினி, கமல் ஆகியோர் நேரடி அரசியல் மூலமாகவோ, மறைமுக அரசியல் மூலமாகவோ தமிழகத்தின் இளைஞர் சக்தியை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் பாலமாக இருப்பார்கள் என்று சொல்லலாம் .  துவேஷம் இல்லாத, பிரிவினை இல்லாத திராவிடம் என்கிற கொள்கை அடிப்படையில்  கமல் ஒரு கட்சி ஆரம்பித்தால் அது வரவேற்கப்பட வேண்டியதே. அவர் கட்சி நல்ல திராவிட கட்சியாக இருக்குமா என்று தெரியாது, ஆனால் திமுக, அதிமுக மற்ற சுண்டைக்காய் கட்சிகளை  விட மோசமாக இருக்காது என்று சொல்லலாம்.

தமிழகத்தில் வீழ்த்தப்பட்ட வேண்டிய கட்சிகள் திமுக, அதிமுக மற்றும் நேற்று முளைத்த காளான்கள்.  இதை பாஜகவோ, ரஜினியோ, கமலோ யார் செய்தாலும் நன்மையே, தனியாக செய்தாலும் சரி, ஒருவருக்கொருவர் போட்டி போட்டு செய்தாலும் சரி, ஒன்று சேர்ந்து செய்தாலும் சரி, தமிழ்நாட்டிற்கு நல்லதே.

Wednesday, September 13, 2017

மாணவர்கள் மருத்துவ படிப்புடன் விளையாடிய மாநில அரசு

நீட் விவகாரத்தால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் பாழாய்விட்டது  என்று போலி பிரச்சாரம் செய்யும் திமுக, காங்கிரஸ் மற்றும் சுண்டைக்காய்களே, பாண்டிச்சேரியில் அம்மாநில அரசு 770 மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளது தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30க்குள் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் முடிக்கப்படவேண்டும், ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தடையையும் மீறி மனம் போன போக்கில் 2016ல் அக்டோபர் 6 வரை கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி மருத்துவ கவுன்சிலின் வழிக்காட்டுதல்களை சற்றும் சட்டை செய்யாமல், நீட் அடிப்படையில் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.  தனியார் கல்லூரிகள் கட்டணம் பெற்றுக்கொண்டு மாணவர்களை சேர்த்துக்கொண்டன, இருப்பினும் இந்த மாணவர் சேர்க்கையே முறைகேடானது என்று அப்பொழுதே புகார் எழுப்பப்பட்டது.

உச்ச நீதிமன்றம் மற்றும் மருத்துவ கவுன்சிலிடம் புகார் அளிக்கப்பட்டது. 10 மாதங்கள் கழித்து, இந்த ஆண்டு ஜுலை மாதம் முறைகேடாக மாணவர்களை சேர்த்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க புதுச்சேரி காங் - திமுக கூட்டணி அமைச்சரவை உத்தரவிட்டது. இந்த 770 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்யவும்  பரிந்துரை செய்தது புதுச்சேரி மாநில அரசு.

என்ன வேடிக்கை, உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, தனியார் கல்லூரிகளில் அரசு கோட்டாவில் மாணவர் சேர்க்கைக்கு கவுன்சிலிங் நடத்தி முறைகேடுக்கு வித்திட்டது புதுச்சேரி காங்- திமுக அரசு, நடவடிக்கை என்னவோ கல்லூரிகள் மீது மட்டும்.  கல்லூரிகள் மீது நடவடிக்கை எப்படியோ போகட்டும், மாணவர்கள் எதிர்காலம் வீணாகியுள்ளதே, அதற்கு யார் பொறுப்பு?

770 மாணவர்கள் சுமார் தலைக்கு 4 லட்சம் கட்டியிருந்தாலும் சுமார் 25 கோடி ரூபாய் இந்த கல்லூரிகள் கல்லா கட்டியுள்ள. மானவர்கள் கட்டிய பணமும் திரும்ப வரப்போவதில்லை, இரண்டு ஆண்டுகள் வீண் (இந்த ஆண்டுக்கான விண்ணப்ப தேதி முடிந்து விட்டதால், இந்த ஆண்டு அவர்களால் எந்த படிப்பிலும் சேர முடியாது).

இது ஒரு புறம் இருக்க, பாண்டிச்சேரி பல்கலை கீழ் இயங்கும் தனியார் கல்லூரிகளில்  MBBS படிப்பில் சேர்ந்த 304 மாணவர்கள் முதலாமாண்டு தேர்வு எழுதாமல் செய்துவிட்டது புதுச்சேரி அரசும் தனியார் கல்லூரிகளும். மருத்துவ கவுன்சிலிங் விதிப்படி, MBBS படிப்பில் சேரும் மாணவர்களின் அடிப்படை தகுதி தேர்வு (+2 சாண்றிதழ் ) சேர்க்கை முடிந்த குறிப்பிட்ட சில நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அரசு கவுன்சிலிங் மூலம் சேர்ந்தவர்களது சான்றிதழ்கள் முறையாக அனுப்பிவைக்க பட்டுளளது, ஆனால் தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டா மூலம் சேர்ந்த 304 மாணவர்கள் சாண்றிதழ்கள் அனுப்ப படவில்லை. இவர்களுக்கு தகுதி இருக்கிறதா தெரியாத சூழலில்,  மருத்துவ கவுன்சில் புதுச்சேரி அரசிடம் குறிப்பிட்ட சில கல்லூரிகள் செய்த முறைகேடுகள் பற்றி எடுத்துரைத்து, உடனடியாக சாண்றிதழ் பெற்று தர கேட்டது , ஆனால் புதுச்சேரி அரசு அவ்வாறு செய்ய தவறியதால் 304 மாணவர்கள் முதலாமாண்டு தேர்வு எழுத முடியவில்லை.  இது நடந்தது இந்த ஆண்டு ஜூன் மாதம்.

இவ்வாறாக 1074 மாணவர்களின் மன உளைச்சலுக்கு காரணம் புதுச்சேரி காங் - திமுக அரசு தான்.  தனியார் கல்லூரிகள் கோடிகள் குவிக்க புதுச்சேரி அரசே காரணம், இதற்கு என்ன பலன் கிடைத்ததோ, யாம் அறியோம்.

ஸ்டாலினும் ராகுலும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

காத்திருக்கிறேன் 

ஆதாரம்